Monday 6th of May 2024 10:23:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
2வது ரீ-20: 43 ஓட்டங்களால் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தியது இலங்கை!

2வது ரீ-20: 43 ஓட்டங்களால் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தியது இலங்கை!


சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான 2வது ரீ-20 போட்டியில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி.

முதலாவது போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இன்று நடைபெற்ற 2வது போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமறிங்கிய தனுஸ்க குணதிலக மற்றும் பதும் நிஸங்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

10.2 ஓவர்கள் 95 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்த நிலையில் 37 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிஸங்க ஆட்மிழந்து வெளியேறினார். பிராவோ வீசிய ஆதே ஓவரில் குணதிலகுவும் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கியவர்கள் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்த தவறிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றிருந்தது இலங்கை அணி.

161 ஓட்டங்களை பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தனர்.

கடந்த போட்டியில் ஹட்ரிக் முறையில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த அகில தனஞ்செய் எவின் லீவிசை 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றியிருந்தார்.

அந்த சரிவில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இறுதிவரை மீளமுடியாத அளவுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்திருந்தனர்.

இறுதியில் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மட்டும் பெற்று 43 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஐந்து வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்திருந்ததுடன், கடந்த போட்டியில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளில் ஆறு 6 ஓட்டங்களை விளாசி அதிரடி காட்டிய பொலார்ட் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் ஹசரங்க டீ சில்வா மற்றும் சன்டகன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், சமீர 2 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்செய ஒரு விக்கெட்டையும் கைப்பைற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹசரங்க டீ சில்வா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 1:1 என சமநிலைப்படுத்தி தொடரின் வெற்றியை தக்கவைத்துள்ளது.

தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE